நான் இதுவரை தமிழில் எழுதியது இல்லை. முதல் பதிவே ஒரு நல்லவரை பற்றி இருக்கவேண்டும் , அதுவும் நம்மோடு இருப்பவராய் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்னொரு காரணமும் உண்டு. நடிகர் திலகத்தை பற்றி எழுதலாம் என்றால் அதை ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதிவிட்டேன். இப்பொழுது பேசப்படும் படம்…வர இருக்கும் படம் குசேலன்.! அதில் ஒரு சிறிய வேடம் எனக்குக்கிடைத்தது. என் நண்பர் இயக்குநர் பி.வாசு மூலமாக. இப்படத்துக்காக நான் சுமார் இரண்டு வாரங்கள் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக சென்று இருந்தேன். அப்பொழுது தான் அந்த அதிசய நபருடன் பேசி பழக நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. என்னவென்று சொல்ல? இப்படி ஒரு நபரை நான் சந்தித்ததே இல்லை! இனியும் சந்திப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது. அவரின் எளிமையை காண பல சந்தர்ப்பங்கள் , படப்பிடிப்புக்கு இயக்குநர், 11 மணிக்கு வந்தால் போதும் என்று சொன்னாலும், 9 மணிக்கே வந்து எங்கள் அனைவருடனும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்ததைச்சொல்லவா?
ரூமில் என்ன பண்ணப்போறேன். இங்கேயாவது நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் என்று சமபந்தி போஜனம் அருந்தியதைச்சொல்லவா?
ஆன்மீகத்திலிருந்து, நான் நடத்தும் சினிமாவின் மூலம் நிர்வாகப்பயிற்சியைப்பற்றி பேசியதைச்சொல்லவா?
ஷுட்டிங் முடிந்து நாங்கள் எல்லோரும் பிலிம் சிட்டியைச்சுற்றி வாக்கிங் சென்றதை நினைத்து நெகிழவா?
உண்மையில் அவர் , இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால், காரணம் அவரின் நல்ல மனமும் குணமும்தான்! ஸ்டைல், நடிப்பு எல்லாம் அப்புறம்தான்…! அவருக்கு அமைதியோ அல்லது தனிமையோ தேவைப்படும்போது சற்றுத்தள்ளிச் சென்று உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கி பிறகு சபையில் கலந்து கொள்வார். ஒவ்வொருவரையும் அழகாக அளந்து அவர்களுக்குச்சேரவேண்டிய மரியாதைக்கு அதிகமாகவே அளிப்பார். சில சீன்களில்தான் இருந்தாலும், ரஜினி என்ற மிகப்பெரிய மனிதருடன் நடித்ததற்கு, முதலில் இயக்குநருக்கும், என்னை அறிமுகப்படுத்திய எனது குரு கே.பாலச்சந்தர் சாருக்கும் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். படையப்பாவில் மணிவண்ணனின் வக்கீலாக இரண்டு நாள் அவருடன் நடித்திருந்தாலும்….இது ஒரு அற்புதமான அனுபவமே..!
((இன்னும் வரும்))
Be First to Comment