இந்த முறை நான் கூறும் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. இன்னும் சொல்லப்போனால் பத்து, பனிரெண்டு ஆண்டுகள் என்றே சொல்லலாம். நான் ஒரு சிவாஜி ரசிகன் என்றும், எம்.ஜி.ஆர் அவர்களின் குடும்ப வக்கீலும், நண்பரின் மகன் என்பதும் தெரியும் என்று நினைக்கிறேன். 1975க்கு பிறகு நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதைக் குறைத்து ஆங்கிலப்படங்களையே விரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் பல நல்ல படங்களை, ரிலீஸ் ஆன காலத்தில் பார்க்கவில்லை. திரை உலகிற்கு வந்த பிறகு இவைகளை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தேன். என் குருநாதர் கே.பி. யின் படங்கள் உட்பட! இந்த லிஸ்டில் நான் ஒரு நாள் இரவு வீட்டில் அனைவரும் உறங்கியபிறகு ராகவேந்திரர் படம் பார்த்தேன்.பார்த்து பரவசம் அடைந்தேன் என்று சொன்னால் மிகையாகாது. படம் முடியும்போது அதிகாலை மூன்று மணி இருக்கும். நான் பூஜை அறைக்குச் சென்று சற்று தியானம் செய்வோம் என்று யோசித்தேன். அங்கு சென்று அமர்ந்துபார்த்தால் ராகவேந்திர சுவாமிகளின் படம் பூஜையில் இல்லை.
கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்த போது ஒரு ப்ளாஷ் வந்தது. நீ யாரைப்பார்த்து இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாயோ அவரிடமே சென்று படம்
வாங்கிக்கொள் என்று…இது சாத்தியமா…….என்று விட்டுவிட்டேன்.
ஒரு சில நாட்களில், ஜெய்ஸ்ரீ பிக்சர்ஸ் அதிபர் டாக்டர்.எஸ்.வி.ரமணனை சந்தித்து அவரிடம் இக்கதையை சொன்னேன். முடிந்ததைச்செய்கிறேன் என்றார். நாட்கள் சென்றன.
எஸ்.வி.ரமணன் ஒரு நாள் அவரது அலுவலகத்தில் நடக்க இருந்த பொங்கல் விருந்துக்கு அழைத்தார். ( பொங்கல் நாள் அன்று இல்லை..!அதற்கு அடுத்த நாள்) சென்றேன். சூப்பர் ஸ்டார் வந்திருந்தார். சற்று டென்ஷன் ஆக இருந்தார் – ஒரு படம் ரிலீஸ் ஆன நேரம். பலர் சென்று படம் சூப்பராக இருக்கு கவலை வேண்டாம் என்று சொன்னார்கள்….அவர் வந்ததே சுமார் 10 மணி அளவில்..இரவு உணவுக்கு பலர் சென்றார்கள். நாங்கள் சிலர் இன்னும் பேசிக்கொண்டு இருந்தோம்.
அப்பொழுது எஸ்.வி.ஆர்..என்னிடம் சாருக்கு அந்தக்கதையை சொல்லுங்கள் என்றார். இரவு 11.30க்கு சொன்னேன். சூப்பர் ஸ்டாரும் கேட்டார். நான் எனது ஆசையையும் சொன்னேன். எனக்கு நீங்கள் ஒரு படம் தாருங்கள் என்று! இவ்வளவு லேட் ஆக,, அதுவும் அவர் “டென்ஷனில்” இருந்தபோது ,நாம் சொன்னோமே என்று எனக்கு நம்பிக்கை இல்லை! சரியாக 2.. 3 நாள் கழித்து அதாவது பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு ஒரு போன் வந்தது… நாங்கள் ரஜினி சார் வீட்டில் இருந்து பேசுகிறோம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என் பெயர் சத்யநாராயணா என்று..! டப்பிங்கில் இருப்பதாகவும் , வீட்டிற்கு மதியம் உணவு நேரத்தில் வந்து விடுவேன் என்றும் சொன்னேன்.
ஒரு ஆட்டோவில் வெள்ளை ஆடை அணிந்து ஒருவர் (திரு.ஜெயராம் என்று பிறகு தெரிந்தது) ஒரு பெரிய (2அடிக்கு 1 1/2 அடி) ராகவேந்திரர் படத்தை கொடுத்து சார் கொடுக்கச்சொன்னார்கள் என்றார்… பூரிப்படைந்தேன்..இன்றும் எங்கள் பூஜையில் அப்படம் இருக்கிறது..
ஒருவர்….அந்தஸ்து பார்க்காமல் இன்னொருவர் மனம் சந்தோஷம் அடையும்படி நடந்துகொள்வது அரிது..அதுவும் விண்ணப்பத்தை மறக்காமல் செய்வது அரிதோ அரிது..அப்படி ஒரு அபூர்வ ராகம்….சூப்பர் ஸ்டார்..!
Be First to Comment